42

மார்க்கம் அனுமதிக்கும் நகைச்சுவையின் நிபந்தனைகள்

கேள்வி: 22170

மார்க்கம் அனுமதிக்கும் நகைச்சுவையின் நிபந்தனைகள் எவை?

பதில்

அல்லாஹ்வுக்கே புகழும், இறைவனின் தூதர் மீது பிரார்த்தனையும் சாந்தியும் உண்டாகட்டும்,

1- மார்க்கத்தை இழிவுபடுத்தக் கூடியவாறு எந்த ஒரு விடயமும் அதில் இருக்கக் கூடாது.

மார்க்கத்தை இழிவு படுத்தும் விடயங்களை பேசுவது இஸ்லாத்தை விட்டும் வெளியாக்கக் கூடிய ஒன்றாக கருதப்படுகிறது. அல்லாஹுதஆலா தனது திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்: (அவர்கள் பேசிக்கொண்டிருந்ததைப் பற்றி) நீர் அவர்களைக் கேட்பீராயின், நிச்சயமாக அவர்கள் “நாங்கள் (வீணாகவும்,விளையாட்டாகவும் பேசிக்கொண்டிருந்தோம்” என கூறுவார்கள், (அதற்கு நபியே! அவர்களிடம்) “அல்லாஹ்வையும் அவனது வசனங்களையும்  அவனது தூதரையுமா நீங்கள் பரிகசித்துக் கொண்டிருந்தீர்கள்?” என்று நீர் கேட்பீராக! உங்கள் தவறுகளை நீங்கள் நியாயப்படுத்த வேண்டாம். நீங்கள் இறைநம்பிக்கை கொண்டபின் திண்ணமாக நிராகரித்துவிட்டீர்கள்.(9/65,66).

இமாம் இப்னு தைமியா அவர்கள் அவர்கள் சொன்னார்கள் "அல்லாஹ்வையோ அவனுடைய அத்தாட்சிகளையோ அல்லது அவனது தூதரையோ இழிவு படுத்துவது ஒரு மனிதன் ஈமான் கொண்டதன் பின்னால் நிராகரிப்பது போன்றதாகும். பிற சுன்னத்தான விடயங்களை இழிவுபடுத்தபவர்களின் நிலைமையும் இதே தான். இன்றைய நாட்களில் தாடி அல்லது முகத்திரை அல்லது கரண்டைக்கு மேலால் ஆடை அணிதல் போன்ற விடயங்களை இழிவுபடுத்துதல் பரவலாக காணப்படுகின்றது.

அறிஞர் முஹம்மது இப்னு உஸைமின் தனது மஜ்மூஉஸ்ஸமீன் என்ற நூலிலே பின்வருமாறு கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் இறையாண்மை , அவனது தூது, இறை வார்த்தைகள், அவனுடைய மார்க்கம் போன்ற அனைத்து பகுதிகளும் கண்ணியப்படுத்தப்பட வேண்டியவைகளாகும். அந்த விடயங்களில் யாரும் சிரிப்பூட்டுவதற்காக கிண்டல் அடித்து விளையாடக்கூடாது. அவ்வாறு செய்பவர் இறை நிராகரிப்பாளராக ஆகி விடுவார். ஏனெனில் அவ்வாறு அவைகளை இழிவு படுத்துவதானது அல்லாஹ்வையும் அவனது தூதரையும் அவனது வேதங்களையும் அவனது மார்க்கத்தையும் இழிவுபடுத்துவதற்கு சமமாகும் . அவ்வாறு செய்தவர்கள் கட்டாயம் அல்லாஹுதஆலாவிடம் அவர்கள் செய்தவற்றிற்காக மன்னிப்பு கேட்டு அவனிடம் மீள வேண்டும்.  ஏனென்றால் இவைகள் நயவஞ்சகத்தனத்தில் உள்ளவைகளாகும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கோரி அவன் பக்கம் மீண்டு அவர் செய்தவற்றிலிருந்து முழுமையாக திருந்தி அவருடைய உள்ளத்தில் அல்லாஹ் பற்றிய அச்சமும் பயமும் கண்ணியமும் அவனுடைய இரக்கமும் உண்டாக வேண்டும். (1/63)

2-நகைச்சுவைக்காகவும் பொய் பேசக்கூடாது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் யார் மக்களை சிரிப்பூட்டுவதற்காக பொய் பேசுகிறாரோ அவருக்கு நாசம் உண்டாகட்டும் அவருக்கு நாசம் உண்டாகட்டும்.(அபூதாவூத்)

இன்னும் ஒரு முறை நபியவர்கள் அன்றைய காலங்களில் சில கோமாளிகள் செய்து வந்த இந்த ஆபத்தான வழிமுறையை எச்சரிக்கும் போது" ஒரு மனிதர் தன்னை சூழ உள்ளவர்களை சிரிப்பூட்டுவதற்காக சில வார்த்தைகளை பேசுகிறார், அந்த வார்த்தைகள் காரணமாக ,  சுரையா எனும் நட்சத்திரம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறதோ அதைவிட தூரத்தில் நரகில் வீசப்படுவார்கள்  (அஹ்மத்)

3- நகைச்சுவைக்காகவும் பிறரை பயமுறுத்த, திடுக்கிட செய்யக்கூடாது.

குறிப்பாக சிலரிடம் துணிச்சல் ஆற்றல் அல்லது அவர்களிடம் இருக்கும் ஆயுதங்கள் அல்லது இரும்பு துண்டுகள் மூலமாக இருள் சூழ்ந்த நேரங்களில் மக்களை மக்களின் பலவீனத்தை பயன்படுத்தி அவர்களை விளையாட்டாக பயமுறுத்துவதற்காகவும் அச்சுறுத்துவதற்காகவும் முனைவார்கள். அபு லைலா எனும் தாபிஈ சொல்கிறார்கள் நபி அவர்களின் சில தோழர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள் : அவர்கள் ஒரு முறை நபி அவர்களுடன் சென்று கொண்டிருந்தார்கள் அச்சமயம் கூட்டத்தில்  ஒரு மனிதர்  அயர்ந்துதூங்கிவிட்டார் , சிலர் அவரிடம் சென்று அவருடைய அந்த கயிறை எடுத்துக் கொண்டார்கள் , அதனை உணர்ந்த அவர் அச்சத்தில் திடுக்கிட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சொன்னார்கள் "எந்தவொரு முஸ்லிமும் இன்னொரு முஸ்லிமை திடுக்கிட செய்யக்கூடாது "(அபூதாவூத்)

4-கண் சாடை மற்றும் கை சாடை மூலமாக கிண்டல் அடித்தல்.

மனிதர்கள் அறிவு, உணர்வுகள் மற்றும் நடத்தைகள் ரீதியாக பலதரப்பட்டவர்களாக இருப்பார்கள். அவர்களில் மனரீதியாக பலவீனமான சிலரும் இருக்க தான் செய்கின்றனர். அவர்கள்தான் அடுத்தவர்களை சாடை செய்து கேலிகிண்டல் செய்வதையே பொழுதுபோக்காக கொண்டவர்கள்.இவர்களுக்கென்றே சிலர் சிக்குவார்கள் அவர்களை காணும் நேரமெல்லாம் அவர்களை கேலிசெய்து நையப்புடைத்து விடுவார்கள். இதனை கண்டித்து  அல்லாஹ் தனது திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்:  இறைநம்பிக்கையாளர்களே, எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஒருவேளை அவர்கள் இவர்களைவிடச் சிறந்தவர்களாயிருக்கலாம். எந்தப் பெண்களும் மற்றெந்தப் பெண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஒருவேளை அவர்கள் இவர்களைவிடச் சிறந்தவர்களாயிருக்கலாம். நீங்கள் ஒருவரையொருவர் குத்திப் பேசாதீர்கள். ஒருவருக்கொருவர் மோசமான பட்டப் பெயர்களைச் சூட்டி அழைக்காதீர்கள். இறைநம்பிக்கை கொண்டதன் பின்னர் மோசமான பெயர்களைச் சூட்டுவது மிகவும் கெட்ட விஷயமாகும்.(49/11). இமாம் இப்னு‌ கஸீர்  கூறுகிறார்கள் "அதன் நாட்டம் அவர்களை ஏளனம் செய்து சிறுமைப்படுத்தி கிண்டல் செய்வது,  இது ஹராமான செயலாகும் மேலும் நயவஞ்சகர்களின்‌ பண்பாகும்.

சிலர் சிலரின் தோற்றம் , நடை , அவரின் வாகனம் போன்றவற்றை வைத்து கிண்டல் செய்வதுண்டு,  அவர்களின் இச்செயலின் காரணமாக அல்லாஹ் அதே குறையை இவரில் ஏற்படுத்தக்கூடும். நபியவர்கள் கூறினார்கள் [1](அத்திர்மிதீ).

இவ்வாறு அடுத்தவர்களை நோவினை, கிண்டல் செய்வதை விட்டும் நபியவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள், ஏனெனில் அது பகைமை , குரோதம் போன்றவற்றை வளர்க்க கூடியதாகும்.

நபியவர்கள் கூறினார்கள் "ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். அவர் தம் சகோதரருக்கு அநீதியிழைக்கவோ,அவருக்குத் துரோகமிழைக்கவோ, அவரைக் கேவலப்படுத்தவோ வேண்டாம். இறையச்சம் (தக்வா) இங்கே இருக்கிறது என்று தமது நெஞ்சை நோக்கி மூன்று முறை சைகை செய்தார்கள். ஒருவர் தம் சகோதர முஸ்லிமைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக்குப் போதிய சான்றாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்ற முஸ்லிம்களின் உயிர், பொருள், மானம் ஆகியவை தடைசெய்யப்பட்ட(ஹராமான)வையாகும்" (முஸ்லிம்).

5-   நகைச்சுவை அளவு‌ கடந்து செல்லக்கூடாது.

சிலரிடம் இந்த நகைச்சுவை பண்பானது மிகைத்து அது அவருடைய இயல்பாக மாறிவிடும். அது இறைவிசுவாசிகளின்   நேர்த்தியாக நடத்தல் எனும் பண்பிற்கு முரணானதாகும் . நகைச்சுவை என்பது மன ஆறுதல் , உற்சாகம் போன்றவை நிலைப்பதற்கான ஒரு அனுமதியேயன்றி வேறில்லை.

உமர் இப்னு அப்துல்  அஸீஸ் அவர்கள் கூறினார்கள் " நகைச்சுவை விடயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள், அது குரோதத்தை வளர்க்கக்கூடிய மடத்தனமான செயலாகும்."

இமாம் நவவி கூறுகிறார்கள் "எல்லைமீறிய தொடர்ச்சியான நகைச்சுவை தான் தடைசெய்யப்பட்டதாகும் . ஏனெனில் அது சிரிப்பையும் உளநெருக்கடியையுமே உண்டாக்கும். மேலும் அல்லாஹ்வை நினைவு கூறுவதை விட்டும் பராக்காக்கிவிடும். மட்டுமல்லாது அதிகமான நேரங்களில் பிறருக்கு நோவினை தரக்கூடியதாகவும், குரோதத்தை வளர்க்கக்கூடியதாகவும், அவரின் கண்ணியத்தையும் மதிப்பையும் இல்லாமலாக்கக்கூடியதாகவுமே  அமைகின்றது. இவ்வாறான தன்மைகளிலிருந்து நீங்கிய நகைச்சுவையைத்தான் நபியவர்கள் ஆகுமாக்கியிருக்கிறார்கள் .

6-மனிதர்களின் அந்தஸ்த்து அறிந்து நகைச்சுவையில் ஈடுபட வேண்டும்.

சிலர் எந்த பொருட்டுமின்றி எல்லோருடனும் ஒரேவிதமாக கேலிகிண்டல்கள் , நகைச்சுவைகளில்  ஈடுபடுவார்கள். அது மிக ஆபத்தான நடைமுறையாகும். அறிஞர்களுக்கென்று ஒரு உரிமை இருக்கிறது, பெரியவர்கள் ,முதியோருக்கென்று ஒரு கண்ணியம் இருக்கின்றது.  அவையனைத்தும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். எனவே தான், தான் யாருடன் முகம்கொடுக்கிறேன், அவரின் தன்மை என்ன, என்பதை அறிந்திருப்பது அவசியமாகும். மடையர்கள் , அறிமுகமில்லாதவர்களுடன் நகைச்சுவை செய்வதை தவிர்த்து கொள்வதே சாலச்சிறந்தது.

உமர் இப்னு அப்துல்  அஸீஸ் அவர்கள் கூறினார்கள் " நகைச்சுவை விடயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள், அது மனிதாபிமானத்தை போக்கும் செயலாகும்."

ஸஃது இப்னு அபீவக்காஸ் கூறுகிறார்கள் நகைச்சுவையை குறைத்துக்கொள்ளுங்கள் ஏனெனில் எல்லைமீறிய நகைச்சுவை புத்தியை மழுங்கச்செய்து மடையர்களை உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தச்செய்து விடும் .

7- சோற்றுக்கு உப்பை போன்று பேச்சில் நகைச்சுவை குறைவாகவே இருக்க வேண்டும்.

நபியவர்கள் கூறினார்கள்" அதிகமாக சிரிக்காதீர்கள் , அதிகமான சிரிப்பு உள்ளங்களை மரணிக்கச்செய்துவிடும் (ஸஹீஹுல் ஜாமிஃ 7312)

உமர் இப்னு அப்துல் அஸீஸ் கூறினார்கள் ( அதிகமாக சிரிப்பவரின் கண்ணியம் குறைந்துவிடும் அதிகம் நகைச்சுவை செய்பவர் அதன் மூலமே இழிவடைவார், எந்த விடயத்தில் ஒருவர் அதிகமாக ஈடுபடுகிறாரோ அதன் மூலமே அவர் பிரபல்யமடைவார்)

இந்த அர்த்தத்தில் ஒரு அரேபிய கவிதை இருக்கின்றது அதன் சுருக்கம் பின்வருமாறு

நகைச்சுவையை விட்டும் எச்சரிக்கையாக இரு, அது சிறார்கள் , அழுக்கானவர்கள் மற்றும் இழிவடைந்தவர்களை உன் மீது துணிவு கொள்ளச் செய்துவிடும் மேலும் சந்தோஷமாக இருந்த உனது முகத்தில் இருந்து அந்த சந்தோசம் சென்றுவிடும் , கண்ணியமாக இருந்த நீ இழிவடைந்து விடுவாய்.

8-நகைச்சுவைக்காக புறம் பேசக்கூடாது

இது ஒரு மோசமான நோயாகும் , சிலர் நகைச்சுவைக்காக அவ்வாறு சொல்லப்படுகிறதே இவ்வாறு சொல்லப்படுகிறதே என‌‌ கதைப்பது இனிமையாக இருக்கும், ஆனால் இது நபியவர்களின் புறம் என்பதற்கு கூறிய "உனது சகோதரனைப்பற்றி அவன்  விரும்பாத ஒன்றைப்பற்றி கதைத்தல் " (முஸ்லிம்) என்பதில் உள்ளடங்கும் என்பதில் சந்தேகமில்லை.  

9-நகைச்சுவைக்கு பொருத்தமான நேரத்தை தெரிவுசெய்து கொள்ளல்

ஒரு பாலைவன பயணம் , கோடைகால விழா அல்லது நீண்ட இடைவேளைக்கு பின்னால் ஒரு நண்பரை சந்திக்கும் பொழுது ஒரு சிறிய கடி ஜோக் அல்லது ஆச்சரியமான ஒரு துணுக்கு போன்ற விடயங்களை கூறலாம் . அதன் மூலம் அவரின் உள்ளம் குளிரும் , அன்பு,பாசம்  மலரும் . அல்லது கணவன் மனைவிக்கு மத்தியில்  பிரச்சினைகள் உண்டாகி ஒருவர் கோபமடையும் பொழுது அடுத்தவர் இலேசாக ஒரு நகைச்சுவையாக ஏதாவது சொல்வதனால் மற்றவரின் கோபம் தனிந்து பாரிய வெள்ளத்தின் பின்னர் நீரோடைகள் அதன் பழைய நிலைமைக்கு திரும்புவது போன்று , அவர்களுக்கிடையில்  சாந்தமான நிலைமை உண்டாகும் .

முஸ்லிம் சகோதரனே !

ஒரு மனிதர் ஸுப்யான் இப்னு உயைனாவிடம் : " நகைச்சுவை என்பது வெறுக்கத்தக்க மோசமான ஒரு விடயம் தானே கூறினார். அதற்கு இமாமவர்கள் " இல்லை அது ஒரு நபிவழி!, ஆனால் யார் அதனை  பொருத்தமான நேரத்தில்  , இடத்தில் உபயோகித்து,  முறையாக அழகாக கையாள்கிறாரோ அவருக்கே அது ஸுன்னாவாகும்.

இன்று மனிதசமூகம் அவர்களுக்கு மத்தியில் அன்பு,பாசத்தை வளர்த்து அவர்களின் வாழ்க்கையிலுள்ள சோகங்களை துரத்துவதற்காக இந்த நகைச்சுவை தேவைதான், ஆனால் கவலைக்குரிய விடயம் என்னவெனில் அவர்கள் உல்லாசம், நகைச்சுவை மற்றும் கேலிக்கூத்துகளில் மூழ்கி அதே அவர்களின் இயல்பாகவும், அவர்களின் சந்திப்புகளில் அதேவைளையாகவுமே இருக்கிறார்கள். இதனால் அவர்களின் கால, நேரங்கள் வீணாக்கப்படுகின்றன , பத்திரிகைகள் ,  சஞ்சிகைகள் முழுக்க கேலிக்கூத்துகளும் விளையாட்டுமே பிரசுரிக்கப்படுகின்றன.

நபியவர்கள் கூறினார்கள் " நான் அறிந்திருப்பதை நீங்கள் அறிந்தால் நீங்கள் குறைவாக சிரிப்பீர்கள் அதிகமாக அழுவீர்கள்"

இப்னுஹஜர் ரஹிமஹுல்லா தனது பத்ஹுல் பாரி எனும் நூலில் ( இந்த ஸதீஸில் குறிப்பிடப்பட்டிருக்கும் அறிதல் என்பது ;  அல்லாஹ்வின்‌ மகத்துவம் , பாவம் செய்தவர்களை அவன் பழிவாங்கும் விதம் மற்றும் உயிர்கைப்பற்றப்படும் நேரம் , மரணம் , மண்ணறை மற்றும் மறுமைநாளில் நடக்கவிருக்கும் பயங்கரமான விடயங்களுடன் சம்பந்தப்பட்ட நபியவர்களின் அறிவை தான் குறிக்கிறது.

எனவே ஒவ்வொரு முஸ்லிமான ஆண்,பெண்கள் அனைவரும், நல்லவர்களை பின்பற்றி தனது வாழ்வின் அனைத்து விடயங்களிலும் அல்லாஹ்வின் பக்கம் உறுதியுடன் நேர்மையாக தன்னை வழிநடத்திச்செல்லக்கூடிய உண்மையான விசுவாசமான ஒரு தோழமையை தெரிவு செய்வது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அறிஞர் பிலால் இப்னு ஸஃது என்பவர் நபித்தோழர்கள் பற்றி  கூறும்போது" ஓட்டப் பந்தயத்தில் ஈடுபடக்கூடியவர்களாகவும் , அவர்களுக்கு மத்தியில் சிரித்து கொள்பவர்களாகவும் அதேநேரம் இரவையடைந்து விட்டால் வணக்கவழிபாடுகளில் மாத்திரம் ஈடுபடக்கூடியவர்களுமே அவர்களை நான் கண்டேன்"  என கூறுகிறார்கள்.(அந்நஸாஈ அல்குப்ரா 11855).

ஒரு முறை இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் " நபித்தோழர்கள் சிரிப்பார்களா " என கேட்கப்பட்ட பொழுது " ஆம், ஆனால் அவர்களின்  உள்ளங்களில் ஈமான் மலைபோல பதிந்துள்ள நிலையில்" என பதிலளித்தார்கள்.

எனவே நாமனைவரும் அவர்களைப்போன்றே பகலில் குதிரை வீரர்களாகவும் , இரவில் வணக்கசாலிகளாகவும் வாழ முயற்சிக்க வேண்டும்.

அல்லாஹுதஆலா எம்மனைவரையும் நமது பெற்றோர்களையும் அந்த பயங்கரமான மறுமை நாளில் எந்த பயமுமற்றவர்களாகவும், அந்த மகத்தான நாளில் (எந்தப் பயமும் கவலையும் இன்றி சொர்க்கத்தை நுழையுங்கள்) என்று அழைக்கப்படக் கூடியவர்களாகவும் ஆக்குவானாக.

^1 உனது  சகோதரனின் துன்பத்தை கண்டு சந்தோஷப்பட வேண்டாம்,(சிலவேளை ) அல்லாஹ் அவருக்கு அருள்புரிந்து உனக்கு அந்த கஷ்டத்தை தந்து விடலாம்

மூலநூட்கள்

மூலம்

மூலம் அப்துல் மலிக் அல்காஸிமின் ஒரு பதிவு