55

பள்ளிவாயல்களில் நாற்காலிகள் மீது அமர்ந்து தொழுவோர் தொடர்பாக...!

கேள்வி: 9307

சில பள்ளிவாயல்களில் தொழுகையாளிகளுக்காக  நாற்காலிகள் வைக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. அவற்றின் மீது சிலர் அமர்ந்து இமாமுடன் பர்ளான தொழுகை மற்றும் தராவீஹ் போன்ற தொழுகைகளை மேற்கொள்கின்றனர்.

இவர்களது தொழுகையின் நிலை என்னவென்று கூறவும்.

பதில்

அல்லாஹ்வுக்கே புகழும், இறைவனின் தூதர் மீது பிரார்த்தனையும் சாந்தியும் உண்டாகட்டும்,

தொழுகையில் எழுந்து நிற்பது அடிப்படை அம்சம். யாராவது தொழுகையில், எவ்வித காரணமுமின்றி ஆரம்ப தக்பீர் முதல் இறுதி ஸலாம் வரை எழுந்து நின்று தொழவில்லையோ!? அவரது தொழுகை செல்லுபடியற்றதாகிவிடும்.

அல்லாஹ் கூறுகிறான்

حَافِظُوْا عَلَى الصَّلَوٰتِ وَالصَّلٰوةِ الْوُسْطٰى وَقُوْمُوْا لِلّٰهِ قٰنِتِيْنَ‏

(நம்பிக்கையாளர்களே!) அனைத்து தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத்தொழுகையையும் (நேரம் தவறாமல்) பேணி(த் தொழுது) கொள்ளுங்கள். மேலும், (தொழுகையில்) *அல்லாஹ்வுக்குப் பயந்து மிக்க உள்ளச்சத்தோடு நில்லுங்கள்.*

(அல்குர்ஆன் : 2:238)

அவ்வாறே பர்ளான தொழுகையில் எழுந்து நிற்பது கட்டாயமான அம்சம், நபிலான தொழுகையில் எழுந்து நிற்பது கட்டாயமில்லை, அமர்ந்து தொழுவதும் அனுமதிக்கப்பட்டுள்ளது. நபிலான தொழுகையில் அமர்ந்து தொழுபவருக்கு நின்று தொழுபவரின் அரைவாசி கூலி வழங்கப்படும்.

நின்று தொழுவது (கட்டாயம்) பர்ளான தொழுகைக்கு மாத்திரம் உரித்தானது என்பதற்கான ஆதாரம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் (நீ நின்று தொழுதுகொள்) என்ற கூற்றாகும்.

நூல் : புகாரி (1066)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது வாகனத்தில் நபிலான தொழுகை தொழுபவராக இருந்தார்கள். பர்ளான தொழுகையை தொழ நேர்ந்தால் தனது வாகனத்தில் இருந்து இறங்கி விடுவர்கள். .

நூல் : புகாரி (955) முஸ்லிம் (700)

இறங்கிய காரணம், நின்று தொழுவதற்கும் கிப்லாவை முன்னோக்குவதற்குமாகும்.

யாராவது ஒருவர் நபிலான தொழுகையில் எழுந்து நின்று தொழுவதற்கு முடியுமாக இருந்தும் அமர்ந்து தொழுதால், அவருக்கு அரைவாசி கூலி வழங்கப்படும்.

அப்துல்லாஹ் பின் அமர் (ரழி) அவர்கள் ஒரு முறை நபியைப் பார்த்து "அல்லாஹ்வின் தூதரே! அமர்ந்து தொழுபவரின் தொழுகைக்கு அரைவாசி கூலி வழங்கப்படும் என்று நீங்கள் கூறியதாக நான் கேள்விப்பட்டேன் ஆனால் நீங்கள் அமர்ந்து தொழுகிறீர்கள்? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஆம், ஆனால் நான் உங்களில் ஒருவரையும் போலல்ல.)  ஹதீஸின் ஒரு பகுதி நூல்: முஸ்லிம் (735)

இமாம் நவவி (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸுக்கு விளக்கம் கூறுகையில் " இந்த ஹதீஸ் நபிலான தொழுகையில் நின்று தொழுவதற்கு முடியுமாக இருந்தும் அமர்ந்து தொழலாம் என்பதை கூறுகிறது. அவ்வாறே அமர்ந்து தொழுபவருக்கு நின்று தொழுபவரின் அரைவாசி கூலி வழங்கப்படும். இயலாமை காரணமாக நபிலான தொழுகையில் அமர்ந்து தொழுதால் அவரது கூலியில் எந்தவித குறைபாடும் இருக்காது, மாற்றமாக அவர் நின்று தொழுத கூலி வழங்கப்படும்.

பர்ளான தொழுகையைப் பொருத்தவரை முடியுமாக இருந்தும் அமர்ந்து தொழுதால் தொழுகை செல்லுபடியாகாது, கூலியும் வழங்கப்படமாட்டாது, மாறாக அவர் பாவியாகிவிடுவார்‌.

நூல்: ஷர்ஹு முஸ்லிம் (6/258)

அந்த வகையில் பர்ளான தொழுகையில் நின்று தொழாமல், நாற்காலிகளில் அமர்ந்து  தொழுபவர்களுக்கு கூறுவது யாதெனில், நின்று தொழ முடியுமாக இருந்தும் அமர்ந்து தொழுவது  அனுமதிக்கப்படவில்லை. இருந்தாலும் உங்களுக்கு நின்று தொழுவதன் மூலம் உடல் ரீதியான பாதிப்பு மற்றும் நோவினை ஏற்படுமாயின், அமர்ந்து தொழலாம், சிறிய கஷ்டங்கள் தகுந்த காரணங்களாக அமையாது.

மூலநூட்கள்

மூலம்

அஷ்ஷெய்க் முஹம்மத் ஸாலிஹ் அல்முனஜ்ஜித்